போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் இறப்பது அதிகரிப்பு
கஞ்சா கடத்திய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம்
போதைப் பொருள் பழக்கத்தால், குடும்பம், கல்வி, பணி சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு, நோய்தாக்கம் மற்றும் இறப்புகளும் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னை மதுரவாயல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை மதுரவாயல் காவல் நிலையத்தினர் சோதனை செய்ததில், அதில் சாக்கு பைகளில் 186 கிலோ அளவிற்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் கஞ்சா கடத்திய மதுரை பேரையூரைச் சேர்ந்த புதுராஜா, பெரிய கருப்பன் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், கஞ்சா கடத்திய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரது தீர்ப்பில், போதைப் பழக்கத்தால், குடும்பம், கல்வி, பணி சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு, நோய் தாக்கம் ஏற்பட்டு, இறப்புகளும் அதிகரித்து வருவதாக தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.
What's Your Reaction?