திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ 100 கோடி திருடியது உண்மை தான் : ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல் வாக்குமூலம்
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சிகாலத்தில் திருப்பதி கோயில் உண்டியலில் ரூ 100 கோடி ரூபாய் வெளிநாட்டு கரன்சி திருடப்பட்டது உண்மை தான் என ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையின்போது 100 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா உதவியுடன் முன்னாள் எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், திருப்பதி தேவஸ்தானமும், ஊழியர் ரவிக்குமாரும் சமரசம் செய்து கொண்டனர். திருடிய பணத்தில் வாங்கிய சொத்துகளை மீண்டும் தேவஸ்தானத்துக்கே வழங்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ரவிக்குமார் கண்ணீர்விட்டு அழதபடி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடியது உண்மை தான் என என அந்த வீடியோவில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனது சொத்தில் 90 சதவீதத்தை ஏழுமலையானுக்கு எழுதி கொடுத்து விட்டதாகவும், தன்னை மேலும் மேலும் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கு பணம் கொடுத்ததாக கூறுவது முற்றிலும் தவறானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் எத்தனை ஆய்வுக்கு உட்படுத்தினாலும் விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும் ரவிக்குமார் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
What's Your Reaction?

