நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்... சிம்லா முத்துச்சோழனை மாற்றியது ஏன்?...
நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதில் ஜான்சி ராணி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளராக முன்பு சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். 20 ஆண்டுகளுக்கும் மேல் திமுகவில் பணியாற்றி வந்த சிம்லா முத்துச்சோழன், கடந்த 20216 ஆம் ஆண்டு ஆர்.கே.நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது தாம் வெற்றி பெற்றால் ஜெயலலிதாவை பெங்களூருக்கே விரட்டுவேன் என சிம்லா முத்துச்சோழன் கூறியது பெரும் சர்ச்சையாகி அதிமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்படி அதிமுகவை கடுமையாக எதிர்த்து வந்த சிம்லா முத்துச்சோழன், அண்மையில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த 15 நாட்களுக்குள்ளாகவே அவரை நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த சிம்லாவுக்கு அதிமுக வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்ததால் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரை மாற்றி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெல்லையில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக ஜான்சிராணி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?