கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்... கமல், சூர்யா, சூரியை வெளுக்கும் நெட்டிசன்கள்!
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரத்தில் கமல், சூர்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அமைதி காப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் அருந்திய நிலையில், அவர்கள் வாந்தி, மயக்கம், தலை வலி ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் நேற்று முதல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் மாற்றம் செய்யப்பட்டதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமிக்கப்பட்டார். அதேபோல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன், குற்றத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் 2 பெண்கள் உட்பட 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 900 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி சின்னதுரை தலைமறைவாகவுள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி, சமுத்திரக்கனி, ஆகியோர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் அவர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவ்வப்போது திமுக அரசை பாராட்டி வரும் இவர்கள், இப்போது மட்டும் ஏன் மெளனமாக இருக்கின்றனர் என கேள்வி எழுப்பி வருகின்றனர். முக்கியமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதை சுட்டிக் காட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் கடந்த முறை அதிமுக ஆட்சியின் போது அரசு நிர்வாகத்தின் தோல்விகளை விமர்சித்த இவர்களால், இப்போது கருத்து தெரிவிக்கவோ குறைந்தபட்சம் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க கூட முடியவில்லையா எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?