செல்லாது செல்லாது.. சண்டிகர் மேயர் தேர்தல்..! தேர்தல் அதிகாரிக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்! முக்கிய உத்தரவு..!
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றியை ரத்துசெய்து வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் வாக்குகளை ஆய்வுசெய்து, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழான அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக - I.N.D.I.A கூட்டணியின் முதல் நேரடிப் போட்டியாக கருதப்பட்ட சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். தொடர்ந்து வாக்குச்சீட்டுகளை முறைகேடாகக் கையாண்டு, குல்தீப்புக்கு ஆதரவான 8 வாக்குகள் செல்லாது எனக்கூறி பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி அனில் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களுடன் ஆம்ஆத்மி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேநேரத்தில் மேயர் பதவியில் இருந்து மனோஜ் ராஜினாமா செய்தபோதும், ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பாஜகவில் இணைந்ததால் மறுதேர்தல் நடத்தினாலும் பாஜக வெற்றிபெறும் சூழல் உருவாகியது. முன்னதாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அதிகாரி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியதாக உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
தொடர்ந்து வரலாற்றில் முதல்முறையாக வாக்குச்சீட்டுகள் உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தொடர்ந்து பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்தார்.
சூழ்ச்சிகளால் ஜனநாயக செயல்முறை வீணாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், அடிப்படை ஜனநாயக ஆணையை உறுதிசெய்ய நீதிமன்றம் இத்தகைய விதிவிலக்கான சூழ்நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார். அதன்படி இந்திய அரசியலமைப்பின் 142வது விதியின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம், மறுதேர்தல் நடத்தப்படா விட்டாலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரே வெற்றிபெற்றதாக அறிவித்தது.
உச்சநீதிமன்றத்துக்கு மட்டும் தனித்துவமாக வழங்கப்படும் இந்த சிறப்பு அதிகாரம், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு முழுமையான நீதியை வழங்க வழிவகை செய்யும் ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. தொடர்ந்து முறைகேடான முறையில் செயல்பட்டதாக தேர்தல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
What's Your Reaction?