கரூர் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: தவெக தலைவர் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு
கரூரில் தவெக பிரசாரத்தின் போது 41 உயிரிழந்த விவகாரத்தில் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு ஜனவரி மாதத்தில் விசாரணை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேற்று ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதிய ழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு செய்திருந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.
அனைத்தையும் எழுத்து மூலமாக பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.அவர்களிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது.
இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற உள்ள நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் ஆஜராகி உள்ளனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விஜயிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, ஜனவரி மாதத்தில் விஜயிடம் விசாரணை நடைபெறும் என சிபிஐ வட்டாரங்கள் கூறப்படுகிறது.
What's Your Reaction?

