எதிரிகள் தொல்லை ஒழிக்கும் நரசிம்மர்... கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் ஆனி சுவாதி பூஜை

நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

Jun 19, 2024 - 11:09
எதிரிகள் தொல்லை ஒழிக்கும் நரசிம்மர்... கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் ஆனி சுவாதி பூஜை


தென்காசி: கடன்கள் தீரவும் நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை செவ்வாய்க்கிழமை ஜூன் 18ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியன நடைபெறுகின்றன. தொடா்ந்து சிறப்பு அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீா்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது.

நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. 

நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன் பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.

நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. இரவும் பகலுமற்ற அந்தி மாலை நேரத்தில் அவதரித்தவர் நரசிம்மர். நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் வணங்கலாம். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார். இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் தீர்த்த வல வழிபாடு நடக்கிறது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும். வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow