கள்ள சாராயம் குடித்து 6 பெண்கள் மரணம்.. தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம்.. விசாரிக்கும் குஷ்பு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தற்போது இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் திமுக நிர்வாகிகள் பலர் இருப்பதாகவும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி விசாரித்தால் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவராது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எனவே சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஆளுங்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். சட்டசபையிலும் இந்த விவகாரம் பெரும் அனலை கிளப்பி வருகிறது. இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழந்திருப்பது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. 6 பெண்கள் பலியானதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப் போவதாகவும், அந்த விசாரணைக் குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்தும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?