நெருங்கும் மக்களவைத் தேர்தல்.. 5வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி !!

Mar 14, 2024 - 12:35
நெருங்கும் மக்களவைத் தேர்தல்.. 5வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி !!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு 5வது முறையாக நாளை தமிழகம் வரவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். 2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி தமிழகம் வந்த அவர், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.

3வது முறையாக பிப்ரவரி 27ம் தேதி பல்லடத்தில் நடந்த ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பிரதமர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து கடந்த 28ம் தேதி தூத்துக்குடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 4-வது முறையாக கடந்த 4-ம் தேதி தமிழகம் வந்த மோடி, கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார். சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, விரைவில் திமுக காணாமல் போகும் என்றும் திமுக ஒரு ஊழல் கட்சி என்றும் கடுமையாக சாடினார். 

இந்நிலையில், இந்தாண்டில் 5-வது முறையாக பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக நாளை (மார்ச் 15) பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என கூறப்படுகிறது. தனி விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுர விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தரும் பிரதமர், அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் விவேகானந்தர் கல்லூரிக்கு சாலை மார்க்கமாக செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்ந்து மார்ச் 18ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெறும் பாஜக பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாகவும், 3.5 கிலோ மீட்டர் பிரதமர் நடந்து செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் மார்ச் 19ம் தேதி சேலம் மாவட்டம் கெஜநாயக்கன்பட்டி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது விரைவில் மக்களவைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்தமுறை பிரதமர் தமிழ்நாடு வந்தபோது திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow