எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்... உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்!

அவரது இழப்பு இலக்கிய உலகத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Mar 1, 2024 - 17:00
Mar 1, 2024 - 17:03
எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்... உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்!

தமிழ் எழுத்தாளரும் மார்க்சிய சிந்தனையாளரும் நாடக இயக்குநருமான இராசேந்திர சோழன் உடல்நலக் குறைவால் காலமான நிலையில், அவரது உடல் அவர் விருப்பப்படி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்த இராசேந்திர சோழன், 1945-ம் ஆண்டு உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தவர் ஆவார். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகனாகப் பிறந்த இவர், ஆசிரியர் ஆக வேண்டும் என்ற பெற்றோரின் வற்புறுத்தலை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினார். சென்னையில் 4 ஆண்டு காலம் பல்வேறு பணியாற்றிய நிலையில், பின்னர் ஆசிரியர் பள்ளியில் இணைந்து பட்டம்பெற்று, 20 ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார்.

பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இராசேந்திர சோழன், செம்மலர், தீக்கதிர், கசடதபற, அஃக், கணையாழி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. இடதுசாரி இயக்கங்களில் தொடர்ந்து இயங்கிவந்த அவர், தனித்துவமான கொள்கைகளுடன் தமிழ்தேசிய மார்க்ஸிய கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பரப்புரைகளுக்காக மண்மொழி என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். 

எழுத்துலகில் தமக்கென்று தனி முத்திரை பதித்த இராசேந்திர சோழன், 53 ஆண்டுகளாக பல்வேறு சிறுகதைகளை அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். சிறகு முளைத்தது, பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம், 21-வது அம்சம் உள்ளிட்ட இவரது நாவல்கள், வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. எழுத்து நடையில் நேரடியான மொழியாளுமை கொண்ட இராசேந்திரன், நாடகத்துறையிலும் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இராசேந்திர சோழன் பல நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து அவர் எழுதிய நாளை வரும் வெள்ளம், நெருக்கடிநிலை அடக்குமுறைகளைப் பற்றிய விசாரணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாடகங்கள் ஆகும்.

அரசியல் களத்திலும் எழுத்துப் புலத்திலும் தொடர்ந்து இயங்கி வந்த இராசேந்திர சோழன், சிறிது காலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 1) காலை காலமானார். இதையடுத்து அவரது உடல், அவர் விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இவரது இழப்பு இலக்கிய உலகத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow