போதையில் ‘கல்யாணம்’ கேட்ட மகனுக்கு ‘காரியம்’ செய்த தந்தை! மன்னார்குடியில் பரபரப்பு!

தந்தை கஜேந்திரன், தம்பி விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Apr 27, 2024 - 18:53
போதையில் ‘கல்யாணம்’ கேட்ட மகனுக்கு ‘காரியம்’ செய்த தந்தை! மன்னார்குடியில் பரபரப்பு!

திருவாரூர் அருகே மதுபோதையில் தினமும் ரகளை செய்து வந்த மூத்த மகனை, இளைய மகனுடன் சேர்ந்து தந்தையே கொன்று, வயலில் வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் கூத்தாநல்லூரை அடுத்த வடகோவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது வீட்டில், இரவானால் ஓயாமல் சண்டை நடந்துகொண்டே இருக்கும். இவரது மூத்த மகனான வெங்கடேஷ் பிரசாத், தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து, ஏதாவது சொல்லி வம்பிழுத்து ரகளை செய்வதை வாடிக்கையாகவே வைத்திருந்துள்ளார். தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ், ஒரு பெண்ணைக் காதலித்து, அது கை கூடாமல் போனதால், விரக்தியில் வேலை விட்டுள்ளார்.

அன்றிலிருந்து தினமும் குடி... காசு இல்லையென்றால் நண்பர்களிடம் கடன் வாங்கிக் குடிப்பது, குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது என, இப்படியே இருந்துள்ளார். இதனால் ஒருபக்கம் அவருக்கு கடன் சுமையும் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முழு மப்பில் வீட்டுக்கு வந்தவர், எனக்கு பணம் கொடுங்கள், இல்லையென்றால் கல்யாணம் செய்து வைய்யுங்கள் என்று கூச்சலிட்டு, தகராறு செய்துள்ளார். இதை, தந்தையும், சகோதரனும் தட்டிக்கேட்டுள்ளனர்.

இதையடுத்து பிரச்னை உச்சகட்டத்தை எட்ட, வெங்கடேஷ் அவர்களை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை கஜேந்திரனும், தம்பி விக்னேஷும், வெங்கடேஷை அடித்து, கயிற்றால் அவர் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தனர். பின்னர், அவரது துணிகளை உருவி, வயக்காட்டில் வீசியுள்ளனர்.  

தகவலறிந்து வந்த கூத்தாநல்லூர் போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தந்தை கஜேந்திரன், தம்பி விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போதையில் ரகளை செய்ததால், பெற்ற மகனை அப்பாவே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow