தைவானில் கோவை தமிழரின் மர்ம மரணம்!
இந்தியா மற்றும் தைவான் இரு நாட்டு போலீஸும் முறையா விசாரிச்சு கண்டுபிடிக்கணும்
உயர் கல்வி மற்றும் வேலை விஷயமாக கோவை மாவட்டத்திலிருந்து வெளிநாடு சென்று தங்கியிருந்த இளைஞரின் மர்ம மரணமானது பரபரப்பை உருவாக்கியுள்ளது!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம்.இவரது மகன் ராகுல்ராம் பி.இ. முடித்துவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தைவான் சென்றவர். அங்கே உயர்படிப்பு முடித்துவிட்டு பின் அங்கேயே பணியிலும் சேர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி பஞ்சலிங்கத்துக்கு தைவானிலிருந்து அழைப்பு வந்துள்ளது.அதில் பேசிய தைவான் போலீஸார், ராகுல்ராம் தான் தங்கியிருந்த குடியிருப்பின் 24வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு துடித்துப் போயிவிட்டது குடும்பம். மேலும், ராகுல் தற்கொலை செய்திருப்பார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதுபற்றி ராகுலின் குடும்பத்தார் சொல்கையில், “தீபாவளியன்னைக்கு கூட சந்தோஷமா பேசிட்டிருந்தான்.இப்ப வேலை பார்த்துட்டு இருக்கிற இடத்துல இருந்து விலகி, வேற ஒரு கம்பெனியில வேலைக்கு சேர இருக்கிறதா சொன்னான்.எங்களுக்கு தெரிஞ்சு அவனுக்கு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு எந்த சூழலும் இல்லை. நார்மலா, மகிழ்ச்சியாதான் இருந்தான். அதைத்தாண்டி இந்த சாவு நடந்திருக்குதுன்னா என்ன காரணம்? தற்கொலைக்கு வாய்ப்பில்லாத நிலையில் அவன் இறந்தது எப்படி? அவனை யாரும் மேலே இருந்து தள்ளிட்டாங்களா?
எங்க ராகுலின் மரணத்துக்கான காரணத்தை இந்தியா மற்றும் தைவான் இரு நாட்டு போலீஸும் முறையா விசாரிச்சு கண்டுபிடிக்கணும்.இதுல யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவங்களை தண்டிக்கணும்” என்கிறார்கள்.
-ஷக்தி
What's Your Reaction?