குண்டா இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல குளிருக்கும் கொள்ளு!
கடந்த இதழில் தேன் பற்றி தோழி ஒரு சிநேகிதி எழுதியிருந்தார். அதே போன்று எங்கள் வீட்டின் உணவு முறையும் பருவகாலத்துக்கேற்பவே இருக்கும். கார்த்திகை மாதமே குளிர்காலத்தில் உடல் வலுவாக வைத்திருக்கும் உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். அதில் முக்கியமானது கொள்ளு. ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்று சொல்வார்கள். ஆனால் எடையைக் குறைக்க மட்டும் அல்ல... கொள்ளு இன்னும் பலவகைகளில் நன்மை பயக்கும்.
ஜெமினி தனம்
குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்னைகள் எல்லா வயதினருக்கும் வரும். அதை கட்டுப்படுத்தவும் வராமல் தவிர்க்கவும் வாரத்தில் இரண்டு நாட்கள் எங்கள் பாட்டி சமையலில் கொள்ளு சேர்த்துவிடுவார். நாங்கள் குழந்தைகள் என்பதால் எங்களுக்கு வெல்லம் கலந்து இனிப்பாக கொடுத்துவிடுவார். அதனால் மறுக்காமல் சாப்பிடுவோம். மற்றபடி கொள்ளு சூப், கொள்ளு ரசம், கொள்ளு முளைக்கட்டிய குழம்பு, கொள்ளு சுண்டல், கொள்ளு இனிப்பு உருண்டை.. என விதவிதமாக செய்வார். பாரம்பரிய சமையலைத் தேடிக்கொண்டிருக்கும் சிநேகிதிகளுக்கு கண்டிப்பாக இந்த கொள்ளு ரெசிபி பிடிக்கும்.
கொள்ளு சூப் - 4 பேருக்கு செய்வதற்கு தேவையான அளவு
கொள்ளு கல் நீக்கி சுத்தம் செய்தது - 2 கப், பூண்டு - 4 பல், உப்பு,மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவைக்கு.
செய்முறை
கொள்ளுவை சுத்தம் செய்து 2 கப் கொள்ளுவிற்கு 8 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 7-8 விசில் வரை விட்டு விடவும்.கொள்ளு நன்றாக வெந்ததும் அதை இறக்கி கொள்ளு நீரை வடிகட்டி கொள்ளவும். ஒரு கைப்பிடி கொள்ளை மிக்ஸியில் மைய அரைத்து வடிகட்டிய நீரில் சேர்க்கவும்.இப்போது கொள்ளு நீரை சூடாக்கி அதில் பூண்டு இடித்து சேர்த்து, சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.இளஞ்சூடாக பரிமாறவும். ஒரு கப் அளவுக்கு மேல் குடிக்க வேண்டாம். இது உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
கொள்ளு சுண்டல்
கொள்ளு சுண்டல் சிரமப்பட வேண்டாம். கொள்ளு சூப் வைத்த நீரை தனியாக எடுத்தால் கொள்ளு கிடைக்கும். ஒரு கப் வேகவைத்த கொள்ளு, கேரட் - 2 டீஸ்பூன், வெங்காயம் பொடியாக நறுக்கியது - கால் கப், வர மிளகாய் - காரத்துக்கேற்ப, கடுகு,உ.பருப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் -தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருள்களைச் சேர்த்து, வரமிளகாய், வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கவும் உப்பு தேவைக்கு சேர்க்கவும். பிறகு கொள்ளு சேர்த்து இறக்கவும். ருசியாக இருக்கும்.
கொள்ளு இனிப்பு சுண்டல்
குழந்தைகளுக்கு இனிப்பாக கொடுக்க விரும்பினால் ஒரு கப் வேகவைத்த கொள்ளுவை லேசாக மசித்து, அதனுடன் நட்ஸ் வகைகள்- கால் கப்,வெல்லம் - கால் கப், தேங்காய்த்துருவல்- 3 டீஸ்பூன், ஏலத்தூள் - சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து உருண்டையாக கொடுக்கலாம். கொள்ளு லட்டு எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடிக்கும்.
கொள்ளு சுழியம்
வேக வைத்த கொள்ளு - 1 கப், பனை வெல்லம் - அரை கப், சுக்குப்பொடி - கால் டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - கால் கப்,உப்பு சிட்டிகை, மைதா மாவு - அரை கப், எண்ணெய் தேவைக்கு.
செய்முறை
மைதா மாவுடன் உப்பு சேர்த்து நீர்க்க கரைத்து வைத்துக்கொள்ளவும். கொள்ளுவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பிறகு வெல்லத்தைப் பொடித்து மைய அரைத்து அதில் சுக்குப்பொடி, ஏலத்தூள் சேர்த்து கலந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். பிறகு எண்ணெயைக் காயவைத்து, உருண்டையை மைதா மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு எடுக்கவும். பாசிப்பருப்பு சுழியம் போல் இதுவும் நன்றாக இருக்கும்.
எங்கள் பாட்டி அரிசி மாவில் செய்வார். எனக்கு அரிசி மாவில் செய்ய வருவதில்லை என்பதால் மைதா மாவில் செய்கிறேன்.
குளிர்காலம் தொடங்கிவிட்டது. இனி வாரத்தில் இரண்டு நாட்கள் கொள்ளு சேருங்கள். வீட்டில் எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். கொள்ளு குளிர்கால நோய்களை வராமல் தடுக்கும்.
What's Your Reaction?

