முரசொலி அறக்கட்டளை இடம் தொடர்பான வழக்கு-ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சொத்தின் மீதான உரிமை யாருக்குள்ளது என தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது
முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை? என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக வருவாய் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-யின் அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை 56 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் பஞ்சமி நிலமே இல்லை என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை சகித்து கொள்ள முடியாமல் பாஜக இந்த புகாரை அளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களை தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டதாகவும், பட்டியல் இனத்தை சேராதவராகவும், பாஜக-வை சேர்ந்த உள்ள ஸ்ரீநிவாசன் என்பவர் அளித்த புகாரில், அதே கட்சியை சேர்ந்தவரான ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் அனுப்பியதாக வாதிட்டார்.
பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டுவதால் தமிழக அரசு தரப்பை இந்த வழக்கில் இணைக்கக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்பதற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். ஒரு மாநிலத்திலிருந்து வரும் புகாரை அதே மாநிலத்தை சேர்ந்தவர் விசாரிக்க முடியாது என்கிற விதியை மீறி தங்களுக்கு எதிரான புகாரை எல்.முருகன் விசாரணைக்கு ஏற்றதே தவறு என்றும் வில்சன் குறிப்பிட்டார்.
பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதுதான் எஸ்.சி. ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் என்றும், உரிமையியல் வழக்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தான் தீர்வு காண முடியும் என சுட்டிக்காட்டினார்.
ஆணையத்தின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் AR.L.சுந்தரேசன் ஆஜராகி, பஞ்சமி நிலம் குறித்த புகாரைத்தான் விசாரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்தின் மீதான உரிமை யாருக்குள்ளது என தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என தெரிவித்தார்.இதையடுத்து, முரசொலி நிலம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உள்ள வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளிவைத்துள்ளார்.
What's Your Reaction?