திமுகவுக்கு வந்தது செருக்கு...அத ஓட்டு மூலமா நொறுக்கு - வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன்...
போதைப்பொருள் விற்பனை மூலம் திமுகவிற்கு வந்தது செருக்கு அதனை ஓட்டு மூலமாக நொறுக்கு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூளுரைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரே வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தீப்பறக்கிறது. பிரதமர் முதல் முதலமைச்சர் வரை தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு இடைவிடாமல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே உரையாற்றிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும் எனவும் அந்த மாறுதலை வாக்கு மூலமாக செய்து காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கச்சத்தீவு, மீனவர்கள் பரம்பரை உரிமை, சுதந்திரம் என அனைத்தையும் தாரை வார்த்து கொடுத்தது திமுக என குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன், இந்த விவகாரம் குறித்து மக்கள் பேச வேண்டும், விவாதிக்க வேண்டும் எனக் கூறினார். தமிழ்நாட்டில் குழாயைத் திறந்தால் தண்ணீர் எப்படி வருமோ அதுபோல சாராயம் கொட்டுவதாகவும் சாராயம் மூலம் பல குடும்பங்கள் கெட்டுப்போய் உள்ளன எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், கோபாலபுரம் குடும்பத்திற்கும் போதைப்பொருள் விற்பனை செய்த நபருக்கும் சம்பந்தம் உண்டா? இல்லையா? என்பதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார். திமுக என்றால் திராவிட முன்னேற்ற கழகம் இல்லை DRUG முன்னேற்ற கழகம் என விமர்சனம் செய்த அவர், போதைப் பொருள் மூலம் திமுகவிற்கு வந்தது செருக்கு அதனை ஓட்டு மூலமாக நொறுக்கு எனவும் முழக்கமிட்டார்.
What's Your Reaction?