பட்டுக்கோட்டை முத்துமாரி அம்மன் கோயில் தேரோட்டம்... ஆடி அசைந்து வந்த தேரில் அருள்பாலித்த அம்மன்.. பக்தர்கள் பரவசம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில் அக்கம் பக்கத்து கிராமங்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் வாழும் மக்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்வர். முத்துமாரியம்மனுக்கும் ஐயனாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேர்களில் பவனி வருவர்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று (ஏப்ரல் 17) விமரிசையாக நடைபெற்றது. காலை முதலே அம்மன், ஐயனார், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் 3 பெரிய தேர்களில் முத்துமாரி அம்மன், ஐயனார், முருகன் ஆகியோர் எழுந்தருளினர்.
மேள தாளம் முழங்க, 3 தேர்தளும் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. மேளதாளம், தப்பாட்டம் முழங்க, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் தாயே முத்துமாரியம்மா என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.
இந்த தேர்த்திருவிழாவை காண பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேரில் ஆடி அசைந்து வந்த அம்மனை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?