பெற்றோரை இழந்த கல்லூரி மாணவரின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் 

குடும்பத்துக்கு 26 கிலோ அரிசி மற்றும் 1 மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.    

Dec 18, 2023 - 17:22
Dec 18, 2023 - 17:46
பெற்றோரை இழந்த கல்லூரி மாணவரின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் 

கல்வி உதவிக்கோரி மாணவன் அளித்த மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஜெகதீஸ்வரன். இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும்,இவரது தாய் தேவி 15 ஆண்டுகளுக்கு முன்பு 2008ம் ஆண்டிலும் இறந்துவிட்டனர். 

தற்போது தந்தை வழி பாட்டியான குளோரியின் பராமரிப்பில் உள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு இயந்திரவியல் படித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உதவி கோரி மனு அளித்தார். அந்த மனுவில் பெற்றோரை இழந்து யாரும் உதவி செய்வதற்கும் ஆதரவு இல்லாத குடும்ப சூழ்நிலை காரணமாக தனது கல்லூரி ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார் .  

மனுவை பெற்றுக்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்தப்படி சம்பந்தப்பட்ட பகுதி வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரின் முறையான விசாரணைக்கு பிறகு இந்த மனுவானது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டது.இதன்பேரில் மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் ஜெகதீஸ்வரன் கோரியிருந்த கல்விக்கட்டணமானது காசோலையாக ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் மாணவனிடம் இந்த காசோலையை வழங்கினார்.மேலும் மாணவனின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர் குடும்பத்துக்கு 26 கிலோ அரிசி மற்றும் 1 மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவை ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.    

பெற்றோரை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.     

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow