வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டக்கூடாது.. கொந்தளிக்கும் மக்கள்.. பள்ளத்தில் இறங்கி போராட்டம்
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பார்வதிபுரம் என்ற இடத்தில் 1887ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்தார் வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாக பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரை பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார்.
தைப்பூசம் நாளில் ஜோதி பெருவிழா நடைபெறும். அப்போது போது ஏழு திரைகளை விலக்கி ஜோதி காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றி பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. வள்ளலார் சர்வதேச மையம் 100 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து கடந்த மாதம் பணிகளை துவங்கியது. இதற்கு உள்ளூர் மக்களும், பல அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒளிக்கோயிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு இன்று அங்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதனையடுத்து அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க கூடாது எனவும் அரசின் வேறு இடங்களில் அமைக்க கோரியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தைப்பூச தினத்தன்று பல லட்சம் பேர் கூடும் இடத்தில் சர்வதேச மையம் மையம் அமைத்தால் பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்
பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் தற்பொழுது காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
What's Your Reaction?