ராக்கெட் ராஜாவுக்கு செக்.. முன்ஜாமின் மனு தள்ளுபடி..
நெல்லையை சேர்ந்த ரவுடியான ராக்கெட் ராஜா, தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஆனைக்குடியை சேர்ந்தவர் ராஜா. கராத்தே செல்வின் என்ற பிரபல ரவுடியின் கூட்டாளியான இவர், 2001ஆம் ஆண்டு ரவுடி கட்டதுரையின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உரிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2009 ஆம் ஆண்டு அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ராக்கெட் லாஞ்சரும், ஏகே47 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவரது பெயர் ராக்கெட் ராஜா என பிரபலமானது. அவரை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா என 3 மாநில போலீசாரும் தேடி வந்தனர்.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நெல்லை போலீசார் தன்னை என்கவுண்டர் செய்ய முயற்சித்து வருவதாகவும், தன் மீது எந்த வழக்குகளும் இல்லை, தற்போது எந்த பஞ்சாயத்திலும் ஈடுபடுவதில்லை எனவும் கூறியிருந்தார்.
இதனிடையே சமீபத்தில், நெல்லையில் குறிப்பிட்ட சமுதாய மக்களை கொலை செய்ய திட்டமிட்டதாக வீடியோ வெளியான விவகாரத்தில் பிளாக் ஜாக்குவார் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராக்கெட் ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக முன் ஜாமின் கேட்டு, ராக்கெட் ராஜா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், மனுதாரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் அமலில் உள்ளதாலும், நெல்லை மாவட்டம் வன்முறை அதிகம் நடக்கும் பகுதி என்பதாலும், மனுதாரர் மீதான வழக்குகளில் சில, வகுப்பு வாத மோதல் சம்பந்தப்பட்டு இருப்பதால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது எனக்கூறி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?