அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்படுகிறதா?- நீதிபதி கேள்வி

காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும்

Feb 17, 2024 - 11:54
Feb 17, 2024 - 12:04
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்படுகிறதா?- நீதிபதி கேள்வி

பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியிருக்கிறது.

மதுரை பேரையூரைச் சேர்ந்த வாசுமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நான் தமிழ்நாடு அரசின் முறையான அனுமதியோடு கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதம் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பேரையூர் சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ- சேவை மையம் நடத்தி வருகிறேன். 

இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது நகற்றி மாற்றம் செய்ததற்காகத் தேவையற்ற பிரச்னையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுகுறித்து  காவல்துறை விசாரணை செய்தனர்.இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர்.இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாகத் தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர்.ஏற்கனவே உயர்நீதிமன்றம் அனுமதியற்ற பிளக்ஸ் போர்டுகளை வைக்கக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது. 

இந்நிலையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்துத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சக்தி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. பத்து வருடம் எவ்வாறு பிளக்ஸ் பேனர் உள்ளது என்றும் அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று கேள்வி நீதிபதி எழுப்பினார். மேலும் காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். எனவே இந்த விவாகரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow