KCR மகள் கவிதாவுக்கு ரூ.292 கோடி ஊழலில் தொடர்பு..? அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்..!

ஊழல் வழக்கில் கடந்த 15ஆம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

Mar 17, 2024 - 15:50
KCR மகள் கவிதாவுக்கு ரூ.292 கோடி ஊழலில் தொடர்பு..?   அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்..!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான கவிதா, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மிகப்பெரிய ஊழலில் தொடர்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அத்துடன், ஊழல் தொடர்ப்பிருப்பதாகவும், அதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை இதுவரையிலும் 9 முறை சம்மன் அனுப்பியுள்ளது. 

இதேவேளையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சவுத் குரூப் தொழிலதிபர்கள் குழு, மதுபானங்களை வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம் ஆத்மி கட்சியின் விஜய் நாயருக்கு வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த குழுவில், சந்திரசேகர ராவின் மகள் எம்.எல்.சி கவிதாவும் உள்ளதால், அவருக்கும் இந்த ஊழலில் தொடர்ப்பிருப்பதாக, கடந்த 15ஆம் தேதி அவரை அமலாக்கத்துறை கைது செய்து, டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. 

அப்போது, எம்.எல்.சி கவிதா தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது, இதனை நான் வெல்வேன் எனவும் கூறினார்.  இந்நிலையில், அந்த ரூ.100 கோடி ஊழலின் தொடர்ச்சியாக, ரூ.292 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அதிலும் கவிதாவுக்கு தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விசாரணையில், கவிதா அலுவலக பணியாளர் ஒருவர் 2 பணப்பையை தொழிலதிபர் தினேஷ் அரோரா அலுவலகத்தில் இருந்து பெற்று, ஐதராபாத் தொழிலதிபர் அபிசேக் வழிகாட்டுதலில், டெல்லி வினோத் சவுகானில் உள்ள ஒருவரிடம் ஒப்படைத்ததாக வாக்குமூலம் அளித்ததை, அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியது. அந்த 2 தொழிலதிபர்களும் மதுபான கொள்கை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக ED-ஆல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவர். தற்போது, கவிதாவை 10 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow