பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை; 45 மணி நேரம் தியானம்; காவல்துறை கட்டுப்பாட்டில் குமரி!

பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புடன் 3,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

May 30, 2024 - 10:15
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை; 45 மணி நேரம் தியானம்; காவல்துறை கட்டுப்பாட்டில் குமரி!
பிரதமர் மோடி

கன்னியாகுமரி: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். விவேகானந்தர் மண்டபத்தில்  45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி  போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஜூன் 1ம் தேதிதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இதற்காக வடமாநிலங்களில் பிரதமர் தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். இன்று மாலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். 

பின்பு படகு மூலம் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தொடர்ந்து இன்று மாலை மாலை முதல் ஜூன் 1ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி இருக்கும் பிரதமர், அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் மொத்தம் 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்பிறகு அவர் டெல்லி புறப்பட்டு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புடன் 3,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி முழுவதும் காவல்துறை,, பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

மேலும் திருநெல்வேலி சரக போலீஸ் டிஐஜி பிரவேஷ்குமாா், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசாரும், பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விவேகானந்தா் மண்டபம், பூம்புகாா் படகுத்துறை, அரசு விருந்தினா் மாளிகை வளாகம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். பிரதமர் வந்திருக்கும் இடத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடைபெற்றது.

குமரியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் முழுமையாக சோதனை செய்தனர். தொடர்ந்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். பிரதமர் வருகையையொட்டி  கன்னியாகுமரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow