தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி டெல்லியில் போராட்டம்

கூலி கொடுத்து ஆட்களை பிடித்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

Dec 2, 2023 - 11:37
Dec 2, 2023 - 16:33
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி டெல்லியில் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்திய சம்பவம் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஆலைக்கு அருகில் உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் நூறாவது நாள் அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் சென்றார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடி கிடக்கிறது. ஆலையை மீண்டும் திறக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. விசாரணை தேதி தள்ளிக் கொண்டே செல்வது ஆலை தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த ஐந்து வருட காலமாக ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்கள் ஆலையை மீண்டும் திறக்க கோரி பல்வேறு வகையில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டெல்லிக்கு சென்று ஜந்தர் மந்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்கள். திடீரென்று டெல்லிக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று அவர்களிடம் கேட்டோம்.

"ஸ்டெர்லைட் ஆலை மூடி கிடப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தூத்துக்குடியின் பொருளாதாரம் மந்த நிலைக்கு வந்துவிட்டது. லாரி தொழில் முற்றிலுமாக படுத்து விட்டது. காப்பரை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்கிறது. இதனால் அந்நிய செலவாணி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டியது அவசியமாகிறது. ஆலையால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுகிறது என்றால் அதை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும். அதை விட்டு ஒரு நிறுவனத்தையே மூட நினைப்பது மிகப் பெரிய தவறாகும்.

எனவேதான் மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். எங்கள் குரல் தமிழக எல்லையைத் தாண்டி டெல்லிக்கு சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். குறிப்பாக நிலுவையில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கு எங்கள் கோரிக்கை செல்ல வேண்டும். அதற்காகவே டெல்லி சென்று போராட்டம் நடத்தினோம்" என்றார்கள்.

இதுகுறித்து ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்களிடம் கேட்டோம். "13 அப்பாவி பொதுமக்களை காக்கா குருவிகளை சுடுவது போல சுட்டு கொன்றுவிட்டு  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய பாவம் ஆகும். வழக்கமாக நீதிமன்றங்கள் மூலம் மூடப்படும் ஆலையை திறந்து விடுவது வேதாந்தாவுக்கு கைவந்த கலை. ஆனால் இந்த முறை அவர்களால் அது நடக்கவில்லை. அதனால் கூலி கொடுத்து ஆட்களை பிடித்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பணத்துக்காக டெல்லி சென்று இருக்கிறது ஒரு கூலிக் கூட்டம். ஆலையை திறக்கக் கூடாது என்று எங்களாலும் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த முடியும்" என்றார்கள்.

ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகளோ "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பதுதான் தூத்துக்குடியில் பெரும்பாலான மக்களின் கருத்து. ஆனால், அவர்களிடம் ஓப்பனாக சொல்ல ஒரு தயக்கம் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் ஓப்பனாக ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் தைரியமாக டெல்லி சென்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே டெல்லி சென்று இருக்கிறார்கள். அந்த போராட்டத்திற்கும் எங்கள் ஆலைக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்கள்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow