போலீசிடம் இருந்து தப்ப பாலத்தில் இருந்து குதித்து காலை உடைத்துக் கொண்ட ரவுடி
தப்பி ஓடிய அஜித்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியில் அக்ரோ ஏஜென்சி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூபாய் 65 ஆயிரம் வழிப்பறி செய்த ரவுடி போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த போது கால் எலும்பு முறிந்தது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெரு பகுதியில் உரம் பூச்சிக்கொல்லி மருந்து அக்ரோ ஏஜென்சி நடத்தி வருபவர் சரவணபவன்( 53) இவர் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 65 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சரவணபவன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்று போலீசார் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டனர்.வழிப்பறியில் ஈடுபட்ட சிங்கிளாந்தி பாரதியார் தெருவை சேர்ந்த சுஜிளி என்கிற சாம்ராஜ் (28) மற்றும் நாகை மாவட்டம் தகடூர் அருகே உள்ள கலையாஞ்சேரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது.
சாம்ராஜ் மீது கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா விற்பனை செய்த சம்பவத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கடந்த மாதம் வெளியே வந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து போலீசார் சிங்கிளாந்தி பகுதியில் உள்ள பாலம் பகுதியில் சுஜிளி என்கிற சாம்ராஜ் போலீசாரை கண்டதும் பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரிடம் இருந்து வழிப்பறி செய்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அஜித்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.வழிப்பறி செய்து பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்ற பிரபல ரவுடி கால் முறிந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?