சென்னையில் எவை எல்லாம் பதற்றமானவை.. வாக்குச்சாவடிகளில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு

Apr 18, 2024 - 14:48
Apr 18, 2024 - 18:25
சென்னையில் எவை எல்லாம் பதற்றமானவை.. வாக்குச்சாவடிகளில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு நாளை (19-04-2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் மிகவும் பதற்றமான மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார். அதன்படி எம்.ஜி.ஆர். நகர் காமராஜர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் ராய் ரத்தோர், "மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடிகளில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அமைதியான முறையில் பொதுமக்கள் வாக்களித்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow