விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் - கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை

மாவட்ட தொடக்க பள்ளி அலுவலர் நளினி தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Dec 11, 2023 - 17:34
Dec 11, 2023 - 18:01
விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் - கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சென்னையின் இரண்டாவது புதிய பசுமைவெளி விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய 4,750 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்படவுள்ளது.இத்திட்டத்திற்கு எதிராக கடந்த 503 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக நிர்வாக அனுமதியை தமிழக அரசானது வழங்கி அரசாணையை வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு  அனுப்பாமல் காலவரையற்ற பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை கடந்த 1ந் தேதி தொடங்கினர்.

இதற்கிடையில்,மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில்,இன்று முதல் மீண்டும் பள்ளிகள் இயங்க துவங்கியுள்ளன.இந்தநிலையில் இன்று ஏகனாபுரம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை 117 மாணவ மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளி நேரம் தொடங்கியும் தற்போது வரை ஒரு மாணவ, மாணவியர் கூட பள்ளிக்கு வராது பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் மாணவி, மாணவியருக்காக காலை உணவு தயார் செய்யப்பட்டு, அதனை உணவருந்த ஒருவர் கூட இல்லாத நிலையானதும் ஏற்பட்டது.மேலும் பாடம் எடுப்பதற்காக ஆசிரியர்,ஆசிரியைகள் பள்ளிக்கு வந்திருந்தும் வகுப்பறையில் மாணவ,மாணவியர் இன்றி தனியாக அமர்ந்து இருக்கின்றனர்.பள்ளி மாணவர்களின்றி வகுப்பறைகள் வெறிச்சோடியே காணப்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட தொடக்க பள்ளி அலுவலர் நளினி தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் தோல்வியுற்ற நிலையில் ஏகனாபுரம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவாயில் கேட்டினை பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையெடுத்து டிஎஸ்பி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்காரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் பேச்சுவார்த்தையின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதமானது ஏற்பட்டது.நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு சமரசம் அடைந்த போராட்டக்காரர்கள் சிறை பிடித்து வைத்திருந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை விடுவித்தனர்.இதனால் அப்பகுதியில் பதற்ற நிலையானது ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow