விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்-டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jan 13, 2024 - 23:42
விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்-டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப்பணிக்கான தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில்,உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

மேலும், நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கியதற்காக, தேர்வாணைய இணைச்செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச்செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேர்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் பரிசீலிக்கப்படும் எனவும், தவறு எப்படி நடந்தது, எப்படி சரி செய்வது என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும், மொத்த தேர்வு முறை குறித்து விசாரித்தால் அது தேர்வாணையத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு, அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். 1 மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். 

அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow