Simbu: சிம்பு தக் லைஃப் படத்தில் நடிக்க தடை.? கொரோனா குமார் சர்ச்சையில் மீண்டும் சிக்கல்!
தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சிம்பு தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்பு நடிப்பதை தரமான ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு அபிஸியலாக அறிவித்தது படக்குழு. முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடிப்பதால் தக் லைஃப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் ஃபிலிம்ஸ் ஐசரி கணேஷ் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சிம்பு – கெளதம் மேனன் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் ட்ராப் ஆனது. அதேபோல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் படத்திலும் சிம்பு கமிட்டாகியிருந்தார். இந்தப் படத்தை ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பிரபலம் கோகுல் இயக்கவிருந்தார்.
இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 4.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தார் ஐசரி கணேஷ். ஆனால் ஒப்புக்கொண்டபடி சிம்பு இந்தப் படத்தில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து சிம்பு மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேநேரம், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு மறைமுகமாக ரெட் கார்டு கொடுத்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கொரோனா குமார் படத்தை முடிக்காமல் தக் லைஃப் மூவியில் சிம்பு நடித்து வருகிறார். இதனால் அவருக்கு எதிராக மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார் ஐசரி கணேஷ்.
அதில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடனான சிம்புவின் அக்ரிமெண்ட் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே சிம்பு தக் லைஃப் படத்தில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சிம்புவுக்கு ஐசரி கணேஷ் சொகுசு கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?