இன்சூரன்ஸ் பணத்திற்கு கொலை செய்த மகன்கள்: பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்ற கொடூரம்
திருவள்ளூர் அருகே, இன்சூரன்ஸ் பணத்திற்காக அவரது மகன்களே 'கட்டுவிரியன்' பாம்பை விட்டு கடிக்க வைத்து, தந்தையின் கொலை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன், 56. இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்., 22ல், அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் ஆகியோர், இரு காப்பீட்டு நிறுவனங்களில் தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த பணத்தை கோரி விண்ணப்பித்தனர்.
கணேசனின் மரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட இன்சூரன்ஸ் நிறுவனம், அவரது மரணம் குறித்து சந்தேகம் அடைந்தது. இதுகுறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ஜெயஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் இருவரும் இணைந்து, தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: கணேசன் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களில், 2.50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். குடும்பம் கடனில் தவிக்கிறது, இதனால், தந்தையை கொலை செய்து, அதை இயற்கை மரணமாக நம்ப வைத்து, காப்பீட்டு தொகையை பெற்று, கடன்களை அடைக்க மகன்கள் திட்டமிட்டனர்.
மூன்று மாதங்களுக்கு முன், தந்தை கணேசனை நல்ல பாம்பை வைத்து கடிக்க வைத்துள்ளனர். அதில், அவர் இறக்கவில்லை. தந்தை துாங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்துள்ளனர். ஆனால், குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி, அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர்.
இதற்காக, அரக்கோணம் அடுத்த மணவூரைச் சேர்ந்த பாலாஜி, 28, பிரசாந்த், 35, திருத்தணி தினகரன், 45, நவீன்குமார், 28, ஆகியோர் உதவியுடன், கட்டுவிரியன் பாம்பை, கடந்த அக்., 21ல் வீட்டிற்கு கொண்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கணேசனின் இரு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
What's Your Reaction?

