ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த குழு.. தேர்தல் நேரத்தில் செக்..
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தொடர்பான வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் நோக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது முக்கிய கூட்டாளியான சதானந்தன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அப்போது மலேசியா, துபாய், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் போதைப்பொருட்களை விநியோகித்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் வழக்கை தீவிரப்படுத்தும் நோக்கில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமைத்துள்ளனர். குறிப்பாக இவ்வழக்கில் சோதனை மேற்கொள்ளவும், சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும், வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் சைபர் கிரைம் ஆய்வு மேற்கொள்ளவும், தலைமறைவான நபர்களை கண்டறியவும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் குழு அமைத்து வழக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?