தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் , முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளியான ’சென்னை பப்ளிக்’ பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100-ல் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும், அண்ணாநகர், ஜே,ஜே நகர், பாரிமுனை மற்றும் முகப்பேர் உள்ளிட்ட 4 பகுதிகளில் செயல்பட்டுவரும் இந்த பள்ளியின் எல்லா கிளைகளிலுமே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது பள்ளி நிர்வாகத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அண்ணா நகர், ஜே.ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 4 பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் அண்ணா நகர், திருமங்கலம் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர சென்னை காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வட சென்னையில் உள்ள சில பள்ளிகள் மற்றும் ராயப்பேட்டை முகப்பேரில் உள்ள சில தனியார் பள்ளிகள் என 13 பள்ளிகளின் மெயில் ஐ.டி.க்கு, பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அகற்றாவிட்டால் குண்டு வெடிக்கும்” என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், மிரட்டல் குறித்து காலை 10:30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்து பொது மக்கள் யாரும் பதற்றமடையத் தேவையில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மெயில் அனைத்தும் ஒரே இ-மெயில் ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில் அது ஒரு புரளி எனத் தெரியவந்துள்ளதாகவும், இ-மெயில் அனுப்பிய நபரைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தேர்வு பயத்திற்காக விடுக்கப்பட்டதை போலத் தெரியவில்லை எனவும், மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலும் இன்று எந்த தேர்வும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.
சோதனை நிறைவு..!