பட்டா நிலத்தில் மதுரை ஜல்லிக்கட்டு மைதானமா? அரசு எப்படி அத்துமீறி நுழைய முடியும்? - நீதிபதி கேள்வி
"எனது சொந்த பட்டா நிலத்தில் அதிகாரிகள் அத்துமீறி பாதை அமைத்து...."
கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பட்டாநிலத்தில் காளைகள் வெளியேற பாதை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீது மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரையை சேர்ந்த கருப்பச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
“மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஏறு தழுவுதல் அரங்கத்தை கடந்த ஜனவரி மாதம் 24ம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்து! ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தின் மைதானம் பின்பகுதியில் தனக்கு சொந்தமாக சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னந்தோப்பு நிலம் உள்ளது. என் பட்டா நிலத்தில் தென்னை, மா, தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்கள் ஏராளமாக உள்ளது. போர்வெல் மற்றும் கிணறு மூலம் விவசாயம் செய்து வருகின்றேன்.
இந்நிலையில் திறப்பு விழாவிற்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகள் எனது இடத்தின் வழியே வெளியேறி கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் என்னிடம் வருவாய்த்துறை அதிகாரியிடம் அனுமதி கேட்ட நிலையில் தமிழக அரசு விழா என்பதாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்துறை அதிகாரிகளே நேரில் வந்து கேட்டுக்கொண்டதாலும் நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
அதன்பின் என் இடத்தை ஒட்டி அமைந்திருந்த ஜல்லிக்கட்டு அரங்கின் காம்பவுண்ட் சுவரினை இடித்து என் தோப்பு அமைந்திருக்கும் இடத்தின் வழியே மாடுகள் வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக தோப்பிலுள்ள மரங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள குழாய் பைப்புகள் மற்றும் வளர்ந்து வரும் நிலையில் உள்ள சில மரங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து காம்பவுண்ட் சுவரினை மீண்டும் கட்டுவதற்கு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்காமல் எனது தோப்பு வழியாக நிரந்தரமாக, மாடுகள் வெளியேற வருவாய்த்துறை அதிகாரிகள் கிரில் கேட் அமைக்கின்றனர். எனது சொந்த பட்டா நிலத்தில் அதிகாரிகள் அத்துமீறி பாதை அமைத்து போட்டி நடைபெறும் நாட்களில் எல்லாம் எனது தோப்பினை நிரந்தரமாக பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தென்னந்தோப்பில் விவசாயம் சார்ந்த பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதோடு நான் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். எனவே எனது சொந்த நிலத்தில் அத்துமீறி மேற்கொண்டுவரும் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்”, என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தபோது, “எவ்வாறு பட்டா நிலத்தில் அதிகாரிகள் அத்துமீறி உள்ளே நுழைய முடியும்?; பட்டா நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் எவ்வாறு பணிகள் மேற்கொள்ள முடியும்? பெரும் போராட்டம் நடத்திய பிறகு ஜல்லிகட்டு நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது. இது போன்ற செயல்களால் ஜல்லிகட்டு நடத்துவதை அதிகாரிகள் கெடுத்து விடாதீர்கள்? ”, எனக் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைப்பு..!
What's Your Reaction?