புத்தாண்டுக்கு கேக் தயாரித்து அனைவருக்கும் தந்த மாணவி அடுத்த நாளே தூக்கிட்டு தற்கொலை
மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி தனது வீட்டில் தன் கையால் கேக் தயாரித்து அனைவருக்கும் பகிர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் வசந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் கார் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் கடைசி மகள் ஸ்ரீநிதி( 17). இவர் மேலப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டில் தானே கேக் தயாரித்து அனைவருக்கும் உண்பதற்கு கொடுத்த அதே வேளையில் நேற்றிரவு தனது பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு இரவில் ஸ்ரீநிதி தூங்க சென்றார். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மாணவி ஸ்ரீநிதி இன்று காலை பள்ளிக்கு செல்ல இருந்த நிலையில், திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அவரது பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே மாணவி ஸ்ரீநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?