நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம்... சுதர்சன் சேதுவை திறந்து வைத்தார் மோடி!

Feb 25, 2024 - 13:15
நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம்... சுதர்சன் சேதுவை திறந்து வைத்தார் மோடி!

குஜராத்தின் ஓகா துறைமுகத்தையும் பேட் துவாரகை தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேதுவைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்களையும், கட்டமைப்புகளையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறார். அதன்படி குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள ஓகா நிலப்பரப்பையும், அரபிக் கடலில் பகுதியில் உள்ள பேட் துவாரகா என்ற பகுதியையும் இணைக்கும் நீளமான கேபிள் பாலத்தைத் திறந்து வைத்தார்.

சுமார் ரூ. 980 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது, ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 2.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பயண தூரத்தைக் குறைக்கிறது. பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்ல, ஓகா துறைமுகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் படகில் பயணிக்க வேண்டி இருந்த நிலையில், போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சுதர்சன் சேது கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாலத்தில் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் கிருஷ்ணரின் படங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் மேல் சூரியசக்தி பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை இன்று (பிப்.25-ம் தேதி) காலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக பேட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ரூ.4,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow