அமலாக்கத்துறை சம்மனால் தமிழக அரசுக்கு கலக்கம் ஏன்?
சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என வினவியுள்ள உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையினரின் சம்மனால் தமிழக அரசை கலக்கம் அடைவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு விற்பனை நடைபெற்றதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறைப் பொறியாளர் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறையினரின் சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தமிழ்நாடு அரசும் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (பிப்.,23) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? எந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ளது? என்பது குறித்து மாநில அரசு விளக்க வேண்டும் என்றார். மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைக்கு தடை விதிப்பது குறித்த தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யும், ஆனால் எப்படி ரிட் மனு எப்படி தாக்கல் செய்யப்பட்டது? மாநில அரசு எப்படி பாதிக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டுமென தெரிவித்து, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
What's Your Reaction?