கொடைக்கானலில் ஓய்வெடுக்க புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.. மே 4 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை

திண்டுக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம் செல்கிறார். இன்று முதல் மே 4 ஆம் வரைக்கும் கொடைக்கானலில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Apr 29, 2024 - 10:08
கொடைக்கானலில் ஓய்வெடுக்க புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.. மே 4 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. சுட்டெரித்த வெயிலில் அனல் பறக்க வாக்கு சேகரித்த அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ரிசல்ட் வரும் வரைக்கும் ஒய்வெடுக்க கிளம்பி விட்டனர். குளுகுளு மலைப்பிரதேசங்களில் உள்ள ரிசார்ட்கள் அரசியல் தலைவர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன. 

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

அக்னி நட்சத்திர காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் குளுமையான  சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குடும்பத்தினருடன் சென்று ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானலுக்கு புறப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்ற முதல்வர் மதுரையில் இருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்கு செல்கிறார். மதியம் 1 மணியளவில் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். 

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் வருகையையொட்டி இன்று முதல் வருகிற மே 4ம் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உதகையில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் மலைப்பிரதேசங்களில் உள்ள ரிசார்ட்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow