தங்க காசு மோசடி.. டிமிக்கி கொடுத்து வந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்.. தஞ்சையில் தட்டி தூக்கிய போலீஸ்
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு மோசடி புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் தஞ்சை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மற்றோருவரை தேடி வருகின்றனர்.
எங்கு சென்றாலும் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சுவாமிநாதன், கணேஷ் சகோதரர்கள். இதனால் கும்பகோணத்தில் அவர்களை ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் மீது 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியதாகவும், 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் இருவரும் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 28.531 கிலோ தங்க காசுகள் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ( ஏப்ரல் 17) தஞ்சையில் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கணேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கணேஷ் தஞ்சாவூர் பாஜக வர்த்தக பிரிவு தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?