ஆர்ப்பாட்டங்களால் தவிக்கும் தலைநகர் சென்னை: அறிவாலயத்தை முற்றுகையால் பரபரப்பு, போலீஸ் குவிப்பு
தலைநகர் சென்னையில் ஒரு புறம் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தூய்மை பணியாளர்கள் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயற்சி செய்தத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாள் போராட்டம்
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கையை முன்வைத்து, இன்று ஐந்தாவது நாளாக எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வட்டார கல்வி அலுவலகம் (BEO Office) முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, 'சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்!' என உரத்த முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் நின்றபடி போராடி வருகின்றனர். எழும்பூரில் வாகன ஓட்டிகள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் இந்தப் போராட்டம் நடைபெறுவதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அரையாண்டு விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்திய ஆசிரியர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் முன்பு தங்களை அழைத்து அரசு பேச வேண்டும் என்றும், இல்லையெனில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் அவர்கள் அரசை வலியுறுத்துகின்றனர்.
அறிவாலய முற்றுகை
சென்னை அறிவாலயம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீசார் அங்கு வந்து அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்த தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்தனர். மேலும் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திடீர் போராட்டம் காரணமாக வாகனஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மீண்டும் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அண்ணா அறிவாலயம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரை ஒருபுறம் இடைநிலை ஆசிரியர்கள், மறுபுறம் தூய்மை பணியாளர்கள் நடத்திவரும் போாட்டாங்களால் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
What's Your Reaction?

