தஞ்சாவூரில் விவசாயி அடித்துக்கொலை.. போலீஸ் ஸ்டேசன் போன போது அடித்துக்கொன்ற கும்பல்

விவசாயி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாய் தகராறு கொலையில் முடிந்துள்ளது.

Apr 2, 2024 - 14:24
தஞ்சாவூரில் விவசாயி அடித்துக்கொலை.. போலீஸ் ஸ்டேசன் போன போது அடித்துக்கொன்ற கும்பல்

கொலை செய்யப்பட்ட விவசாயி பெயர் ஜெயக்குமார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் விவசாய தொழில் செய்து வந்த இவர் இறால் பண்ணையும் நடத்தி வந்தார். இவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, செந்திலை ஜெயக்குமார், இவரது நண்பரான காட்டுக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் கொடுப்பதற்காக நேற்று (ஏப்ரல் 1) சென்றுள்ளனர். 

அங்கு விசாரணை நடத்திய அதிகாரிகள் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 1) மாலை காரில் சென்றனர். பசுபதிகோவில் அருகே சென்றபோது சிலர் காரை வழிமறித்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் ஜெயக்குமார், பிரவீன் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வாய்த்தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow