மயிலாடுதுறையில் தொடரும் பீதி.. கூண்டோடு காத்திருக்கும் வனத்துறை.. சிக்குமா சிறுத்தை

மயிலாடுதுறையில் உள்ள சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று இறந்துள்ளதால் சிறுத்தை இடம்பெயர்ந்துள்ளதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

Apr 5, 2024 - 11:29
மயிலாடுதுறையில் தொடரும் பீதி.. கூண்டோடு காத்திருக்கும் வனத்துறை.. சிக்குமா சிறுத்தை

மயிலாடுதுறை நகரில்  கடந்த 2ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூரைநாடு பகுதியில் வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதுவரைக்கும் சிறுத்தை  பிடிபடாத நிலையில் ஆரோக்கியநாதபுரம் கருவை காடு பகுதிக்கு  இடம்பெயர்ந்தது தெரிய வந்தது. பகலில் ஓய்வெடுத்து விட்டு இரவில் வேட்டையாடும் இனத்தை சேர்ந்தது சிறுத்தை என்பதால் அதனை மாலை நேரத்தில் பிடிப்பதற்கு வனத்துறையினர் வியூகம் அமைத்து தேடி வந்தனர். 

இதற்காக திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தையை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்றிரவு (ஏப்ரல் 4) மயிலாடுதுறைக்கு வந்து சென்சாருடன் கூடிய 10 கேமராக்களை பொருத்தினர். மேலும் சிறுத்தையை பிடிக்க லாரியில் கொண்டுவரப்பட்ட 3 கூண்டுகளில் இறைச்சியை வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிறுத்தை நடமாடும் பகுதியாக கருதப்படும் இடங்களில் 9 பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தர்காடு தண்டபாணி செட்டி தெரு பகுதியில் காவிரி கரை பகுதியில் ஆடு ஒன்று கழுத்துப் பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. 

ஆட்டினை சிறுத்தை கடித்து குதறிவிட்டதாக உள்ளூர்வாசிகள் கூறி வருவதால் அப்பகுதியின் மத்தியில் பீதி நிலவுகிறது.  சிறுத்தைதான் ஆட்டினை கடித்ததா என்று மருத்துவக் குழுவினர் ஆட்டை பரிசோதனை செய்த பின்னரே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று உறுதிப்படுத்த முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow