பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிஸ்கெட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அன்றாட உணவு  பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை

Jan 3, 2024 - 17:41
Jan 3, 2024 - 19:58
பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களான அரிசி பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு  விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை 37 மூலம் திரும்ப பெறப்பட்டது. 

இதை எதிர்த்து தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் நிர்வாகி பி.சாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் அன்றாடம்  உபயோகப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் பேக்கிங் செய்வதை தடை செய்வது சாத்தியமில்லை என்றும், சிறுதொழில் துறையும் இது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் எனவே அதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கெட்கள், மருந்து பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கப்பட்டு வருவதால், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்க தடை விதிக்க 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் நர்மதாசம்பத் ஆஜராகி, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பதை தடை செய்யவது சாத்தியமில்லை என்பதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டதை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் இதற்கும் தடை விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அன்றாட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டு, பின்னர் அதை திரும்ப பெற்று பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை 37 க்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.இதன்மூலம் பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அன்றாட உணவு  பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow