எந்த பயனும் இல்ல.. “பலனளிக்காத வேளாண் பட்ஜெட்”.. எடப்பாடி பழனிசாமி கருத்து..!
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2024-25 ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றிய அமைச்சர் வேளாண் துறையின் பல்வேறு அம்சங்களைத் தனித்தனியாகப் பட்டியலிட்டு நிதி ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்று விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியபடி நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று கூறினார். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது வேதனை அளிப்பதாகக் கூறினார்.
அதேபோல், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்திய அவர், சம்பா, தாளடி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், போதிய நீர் இன்றி நிலங்கள் காய்வதால் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக தெரிவித்தார்.மேலும், அதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை விரைந்து சீர் செய்ய உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறினார்.
காவிரி நதிநீர் பங்கீட்டை முறையாக பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
What's Your Reaction?