அரசு பேருந்து  கண்டக்டரைத் தாக்கிய 4 மாணவர்கள் கைது

ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கிக்கொண்டனர்.

Dec 15, 2023 - 13:53
Dec 15, 2023 - 17:42
அரசு பேருந்து  கண்டக்டரைத்  தாக்கிய 4 மாணவர்கள் கைது

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த போதை மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கண்டக்டரை தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்துநிலையத்திலிருந்து தண்டலச்சேரி வழியாக திருக்கொள்ளிக்காடு கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்றை டிரைவர் மகேந்திரன் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்போது தண்டலச்சேரி பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து திருக்கொள்ளிக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஏற்கனவே போதையில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கும், தண்டலச்சேரி பகுதியில் போதையில் ஏறிய மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த மற்ற பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து பேருந்தின் கண்டக்டர் பக்கிரிசாமி தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டு சமாதானமாக போகும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை மாணவர்கள் ‘அப்படித்தான் சண்டைபோடுவோம். இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா? கவர்மெண்ட் பஸ்’ என்றபடி கண்டக்டரை கீழே தள்ளி சகட்டுமேனிக்கு தாக்கியுள்ளனர். அத்துடன் கம்பாலும் அடித்துள்ளனர். இதனால் மண்டை உடைந்து ரத்த வழிய கண்டக்டர் மயங்கி விழுந்துள்ளார். உடனே பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து கண்டக்டர் பக்கிரிசாமி அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான மாணவர்கள் சுர்ஜித்சிங்பர்னாலா, முருகதாஸ், பிரியதரன், மணிகண்டன் ஆகிய 4 மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கல்லூரியைச்சுற்றி காவல்துறையினர் ஆதரவுடன் போதைபொருட்கள் விற்பனை செய்வோரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும், திருவாரூர் மாவடட்டத்தில் அரசு கல்லூரி  மாணவர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களின் செயல்பாடு நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாகவும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்ந்து  புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow