கும்பகோணம்: பணம் கேட்டு மிரட்டல் - போலீஸ் விசாரித்தபோது தீக்குளிக்க முயன்ற திருநங்கை
திருநங்கை தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
கும்பகோணத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தபோது காவல் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் நகரில் கடந்த சில தினங்களாக திருநங்கைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், வணிக நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை கும்பகோணத்தில் உள்ள பிரபல நகை கடையில் பணம் கேட்டு 6க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வியாபார நேரத்தில் தொல்லை கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக அந்த நிறுவனத்தினர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருநங்கைகளை அழைத்து மேற்கு காவல் நிலையத்தில் கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் விசாரணை நடத்தினார்.அப்போது பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம் எனக்கூறி வெளியே வந்த திருநங்கைகளில் இனியா என்ற திருநங்கை தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து தண்ணீர் ஊற்றியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதனை தொடர்ந்து காவல்துறையினர் திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவல் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?