விவிபேட் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எழுப்பிய சந்தேகங்கள்.. தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்.. தீர்ப்பு தள்ளி வைப்பு
விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இ
இது தொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது.
இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து 60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவிகிதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்பட்டதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இரண்டாவது முறையாக கடந்த 18 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். இந்நிலையில் விவிபேட் தொடர்பான இந்த வழக்கில் இன்று (ஏப்ரல் 24) உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,
தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்த ஒரு சந்தேகமும் அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். ஒப்புகை சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஏற்கனவே விசாரிக்கப்பட்டு விட்டது என தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது. இது எங்களுக்கு உட்பட்ட விவகாரம் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் மைக்ரோ கண்ட்ரோலர் ஒருமுறை மட்டுமே புரோகிராம் செய்யப்படக்கூடியதா என கேள்வி எழுப்பினர். மைக்ரோ கண்ட்ரோலர் மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் உள்ளதா?விவிபேட் இயந்திரத்தில் உள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரி 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளதாக கூறினார். தேர்தல்களில் இதுவரை முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் தரப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு அரசியல் அமைப்பான நீதிமன்றம் இன்னொரு அரசியல் அமைப்பான தேர்தல் அணையத்தை எப்படி கட்டுப்படுத்துவது என நீதிபதிகள் கூறினர்.
மைக்ரோ சிப் குறித்த ஆணையம் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது என பூசன் வாதிட்ட நிலையில் தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களில் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்கத்தான் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆணையத்தின் விளக்கம் மனுதாரரின் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து விவிபேட் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் 4ஆம் தேதியன்று ரிசல்ட் வர உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் அளிக்க உள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
What's Your Reaction?