சென்னை: திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு?.. ரவுடிகள் கைது...

சென்னையில் கோயில் திருவிழாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரத்தில் உள்ள கங்கை அம்மன், கன்னி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. அப்போது மதுபோதையில் பைக்கில் வந்த 3 பேர், திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட செட்டைக் கழற்றிக் கொண்டிருந்த ஆறுமுகம் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் 3 பேரும் தங்களிடம் இருந்து கத்தியால் ஆறுமுகத்தை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் விழா கமிட்டி தலைவர் முருகன், துணைத் தலைவர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 3 பேரையும் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தடுக்க வந்தவர்களை கத்தியால் வெட்டி பெட்ரோல் குண்டு வீச முயன்றுள்ளனர். இதையடுத்து ஒருவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் கே.கே.நகரைச் சேர்ந்த ரவுடி கோபி, மணிகண்டன் மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்தது. இதில், கோபி மீது பெட்ரோல் குண்டுவீச்சு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அம்பலமானது. பொதுமக்கள் தாக்கியதில் தலையில் காயமடைந்த கோபி, தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தப்பியோடிய சஞ்சயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






