வேறொருவரின் சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலாளர்

ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Jan 2, 2024 - 15:35
Jan 2, 2024 - 15:41
வேறொருவரின் சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலாளர்

வேதாரண்யம் அருகே வேறொருவரின் கல்விச்சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரை  தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தாமரைப்புலத்தை சேர்ந்தவர் முனியப்பன்(43). இவர் கோவில்பத்து ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2006ம் ஆண்டு தாமரைப்புலத்தில் ஊராட்சி செயலாளராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கடந்த 17 வருடங்களில் பல்வேறு ஊராட்சிகளில் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் முனியப்பனின் கல்விச்சான்றிதழ் குறித்து சந்தேகம் அடைந்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன் இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பன் 8ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள வேறு ஒருவரின் 10ம் வகுப்பு சான்றிதழை கொடுத்து ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர் முனியப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர் பதவியில் இருந்து முனியப்பன் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow