உரிமையாளருக்கே தெரியாமல் பேருந்தை விற்பனை செய்த கில்லாடி நபர்
தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் உரிமையாளருக்கே தெரியாமல் பேருந்தை விற்பனை செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடிவருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நெல்லுக்கடை தெருவைச்சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். மயிலாடுதுறை முதலியார் தெருவைச்சேர்ந்தவர் எஸ்.கே.மூர்த்தி என்கிற கிருஷ்ணமூர்த்தி. நண்பர்களான இருவரும் பஸ் அதிபர்கள்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி கிருஷ்ணமூர்த்தி தனது பேருந்து பழுது ஏற்பட்டுள்ளதாகவும், மாற்று பேருந்து சேவைக்காக ஒரு பேருந்து தேவைப்படுவதாகவும், 4 நாட்கள் பயன்படுத்திவிட்டு திருப்பி அனுப்பிவிடுவதாகவும் கூறி பாலசுப்ரமணியனிடம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து பாலசுப்ரமணியன் தனது பேருந்தை அனுப்பிவைத்துள்ளார். பேருந்தை 4 நாட்கள் பயன்படுத்திய கிருஷ்ணமூர்த்தி பேருந்தை திருப்பி அனுப்பவில்லை. காரணம் கேட்டபோது பேருந்து பழுதாக உள்ளது. அதனை பழுதுநீக்கி அனுப்புகிறேன்’ என்று கூறியுள்ளார். ஆனால் மாதங்கள் ஓடியும், வருடங்கள் ஓடியும் பேருந்தை திருப்பி அனுப்பவில்லை. இதற்கிடையே அந்த பேருந்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் தகவல் கிடைக்க அதிர்ச்சியின் உச்சிக்கு சென்ற பாலசுப்ரமணியன் இதுகுறித்து மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலசுப்ரமணியனின் பேருந்தை கிருஷ்ணமூர்த்தி வேறொருவருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடிவருகின்றனர்.கடனான வாங்கிய பேருந்தை உரிமையாளருக்கே தெரியாமல் விற்பனை செய்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?