மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலையா? போலீஸ் விசாரணை
சென்னையை அடுத்த அம்பத்தூரில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூர் சூரப்பட்டு துலக்காத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி பொன்னம்மாள். இவரது கணவர் தாமோதரன் சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். மகள் அனைவரும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி பொன்னம்மாளின் கணவர் காலமானதை அடுத்து மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மூதாட்டியின் மகள் தாய்க்கு போன் செய்த போது அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினரிடம் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்டு முகம் ,கழுத்து, பகுதியில் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் புதூர் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை கை, கால்கள் கட்டப்பட்டு படுக்கையில் இறந்த நிலையில் கிடந்த பொன்னம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பொன்னம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அடையாளம் தெரியாத இருவர் நேற்று இரவு பொன்னம்மாள் வீட்டில் புகுந்து அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக கொள்ளையர்கள் தடயங்களை அழிக்க கொலை செய்த பொன்னம்மாள் உடலில் தண்ணீரை ஊற்றி விட்டு சென்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி நேற்று பொன்னம்மாள் வங்கிக்கு சென்று 1 லட்ச ரூபாய் பணம் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நேற்று இரவு இருவர் ஆட்டோவில் பொன்னம்மாள் வீட்டிற்கு வந்து சென்றது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆட்டோவில் தப்பி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் பொன்னம்மாள் வீட்டில் இருந்து எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்றும், பொன்னம்மாள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பொன்னம்மாள் பிரேத பரிசோதனைக்காக அறிக்கை வந்த பின்னரே அவர் பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?