ஆலய உலா : கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இந்த வழிபாடு செய்யுங்கள்!
கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், குடும்பத்தில் நிம்மதியும் நிலைக்க திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபடும் முறைகள் குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.
- வி.ராம்ஜி
’உங்கள் வீட்டில் மதுரையா சிதம்பரமா?’ என்று கேட்பார்கள். மதுரை என்றால் மனைவியின் ராஜாங்கம். சிதம்பரம் என்றால் ஆணின் ஆதிக்கம். யாரேனும் ‘திருச்செங்கோடு’ என்று சொல்லமாட்டார்களா எனும் ஏக்கம் எனக்குள் எப்போதும் உண்டு. திருச்செங்கோடு திருத்தலத்தில், சிவபார்வதி, அர்த்தநாரீஸ்வரராகத் திகழ்வார்கள். ‘சில விஷயங்களில் கணவன், சில விஷயங்களில் மனைவி’ என்றிருப்பதுதானே உண்மையான இல்லறம்!
திருக்கடையூரில் குடிகொண்டிருக்கும் அபிராமி அன்னை மிகுந்த வரப்பிரசாதி. இங்கே அருள்பாலிக்கும் அமிர்தகடேஸ்வரரும் கேட்ட வரம் தரும் கருணைக்கடல். அதனால்தான் நீண்ட ஆயுளுக்காக இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.
திருக்கடையூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவள் ஸ்ரீஅபிராமி அன்னை. கருணையும் கனிவுமாக ஆட்சி நடத்தும் அபிராமி அம்பாளை நினைக்கும்போதே, அபிராமி அந்தாதியையும் அந்தாதியைத் தந்த அபிராமிபட்டரையும் நினைக்காமல் இருக்கவே இயலாது.
அதில் அபிராமிபட்டர், தன் மனைவியையே அபிராமியாக, உமையவளாக, பார்வதிதேவியாக, சக்தியாக, தெய்வமாகவே பாவித்தார்; மனைவியை அமரவைத்து அம்பாளுக்குச் செய்வது போல் பூஜைகள் செய்து வணங்கினார். ‘மனைவியை மனுஷியாக பாருங்கப்பா’ என்று அலுப்பும் சலிப்புமாக வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் உலகில், மனைவியை தெய்வமாகவே பூஜித்த அபிராமிபட்டரும் அவர் தந்த அபிராமி அந்தாதியும் போற்றுதலுக்கு உரியவை; புண்ணியபலன்களைத் தருபவை!
மயிலாடுதுறைக்கு அருகில், பூம்புகாருக்கு அருகில் அமைந்துள்ளது திருக்கடையூர். இந்தத் தலத்தில் உள்ள சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பலம் தந்த திருத்தலம். எமனின் பாசக்கயிறையே வென்றெடுத்த புண்ணிய க்ஷேத்திரம். அதனால்தான் திருக்கடையூர் தலத்துக்கு வந்து, அமிர்தகடேஸ்வரரையும் அபிராமி அம்மையையும் வணங்குகிறோம்.
அதுமட்டுமா? திருக்கடையூர் வந்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான வைபவங்களை, ஆலயத்தில் செய்துகொள்வது விசேஷம். இப்படி அறுபதாம் கல்யாணம், பீமரதசாந்தி, சதாபிஷேகம் என விசேஷங்களைச் செய்யும் ஆலயங்களில் முதன்மையான திருத்தலம் அபிராமி குடிகொண்டிருக்கும் திருக்கடையூர். அபிராமி பட்டர் அவதரித்த பூமியும் இதுதான்!
இவர் அருளிய அபிராமி அந்தாதியை பாராயணம் செய்வதும் சிவனாரையும் அம்பாளையும் வழிபாடு செய்வதும் தம்பதி இடையே ஒற்றுமையை பலப்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும் என்பது உறுதி!
அதேசமயம், அபிராமி அந்தாதியை முழுவதுமாகச் சொல்ல இயலாத நிலையில் உள்ளவர்கள், அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி சொன்ன பலன்களை இந்தப் பாடலைச் சொல்லியும் வழிபட்டு பலன்களைப் பெறலாம்.
அந்தப் பாடல் இதுதான்..!
சகல செல்வங்களும் தரும்
இமய கிரி ராச தனயை
மா தேவி நின்னை
சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி, தன தானியம்
அழகு, புகழ் பெருமை, இளமை, அறிவு, சந்தானம்,
வலிதுணிவு , வாழ்நாள், வெற்றி ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி,
நீ சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்;
சுகிர்த குணசாலி, பரிபாலி அநுகூலி
திரிசூலி, மங்கல விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்க ஓணாதோ?
மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுப நேமி புகழ் நாமி
சிவ சாமி மகிழ் வாமி அபிராமி உமையே!
இந்தப் பாடலை செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் காலையில் பூஜையறையில் விளக்கேற்றிவைத்துவிட்டு பதினொரு முறை சொல்லுங்கள். கணவனும் மனைவியும் சேர்ந்தும் கூட இப்படி வழிபடலாம். கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் அமர்ந்தும் கூட இந்தப் பாடலைச் சொல்லி மனமுருக வேண்டிக்கொள்ளலாம்.
‘வீட்ல எலியும் பூனையுமாவே இருந்தாங்க. இப்ப என்ன ஆச்சு இவங்களுக்கு?’ என்று உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் வியக்கும் அளவுக்கு கருத்து வேற்றுமையில் இருந்து விலகி, கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள். நல்லறத்துடன் இல்லறத்தை அமைப்பார்கள்!
What's Your Reaction?